சுற்றுலாப்பயணிகளைக் கவர்ந்த பார்வைமாடம்.!
பொள்ளாச்சி.பிப்.25 கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியாறு அருகே,ஆனைமலை புலிகள் காப்பகத்தால் அமைக்கப்பட்டுள்ள வனஉயிரின விளக்கமையமும்,பார்வை மாடமும் இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.வனம் மற்றும் வனஉயிரினங்களைக் குறித்து தாங்கள் அறிந்து கொள்ள இம்மையம் பெரிதும் உதவுவதாகவும் அவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியாறு சோதனைச்சாவடி அருகே அமைந்துள்ளது வனஉயிரின விளக்கமையம்.சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் ஆனைமலை புலிகள் காப்பகத்தால் அமைக்கப்பட்டுள்ள இம்மையத்தில்,இச்சரணாலயத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள மலைவாழ்மக்கள்,வனஉயிரினங்கள் மற்றும் வனத்தில் உள்ள தாவரவகைகள்,பூக்கள்,நீர்வாழ் விலங்கினங்கள் ஆகியவற்றைக்குறித்து விளக்கப்படங்களும்,மாதிரிச் செடிகொடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இளைப்பாறும் வசதிக்கான இருக்கைகளுடன் ஒரு பூங்காவைப் போன்ற அழகுடனும் அமைந்துள்ள இம்மையத்தின் சிறப்பம்சங்களுள் ஒன்றாக,இங்கு அமைக்கப்பட்டுள்ள பார்வைமாடம் விளங்குகிறது.பாதுகாப்பான படிக்கட்டுகளுடன் அமைந்துள்ள இக்போபுரத்தின் மீதிருந்து,ஆழியாறு அணையின் தோற்றம்,கிராஸ்ஹில்ஸ் எனப்படும் புல்மலை,வனத்தின் பசுமை,பல்வேறு வண்ணங்களில் அழகு காட்டும் மரங்கள் மற்றும் பறவைகள் என இயற்கை அழகை ரசிக்கமுடிவதால்,இக்கோபுரத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
மேலும்,இம்மாடத்தின் மீது நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளவும் சுற்றுலாப்பயணிகள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.இம்மையத்தை சுற்றிப்பார்ப்பதன் மூலம் ஆனைமலைபுலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியின் தன்மையை அறிந்து கொள்ளமுடிவதாகவும்,அது தங்களுக்கு ஒரு படிப்பனையாகவும் உள்ளது என சுற்றுலாப்பயணிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும்,விடுமறைநாட்களில் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் மற்றும் பள்ளி,கல்லூரி மாணவர்களும் இங்குவந்து இம்மையத்தை ஆவலுடன் சுற்றிப்பார்த்துவிட்டு செல்வதாகவும் வனத்துறை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
நம்ம ஊர் பரவாயில்லை!
12 years ago