Monday, September 28, 2009
நெகமம்-அம்மனை அழைக்க கத்தி போடும் விழா.!
பொள்ளாச்சி.செப்.28 கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள நெகமம் பகுதியில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை தங்கள் கைகளிலும் தோளிலும் கத்தியால் வெட்டிக்கொண்டு தங்கள் உடலை வருத்தி சௌடாம்பிகை அம்மனை தங்கள் ஊருக்குள் வந்து அருள் பாலிக்க வேண்டும் என்று வேண்டுதல் நடத்தும் திருவிழா இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடு;த்துள்ளது நெகமம் இங்குள்ள ஸ்ரீ ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.இதேபோல் இந்த ஆண்டும் நடைபெற்ற விழாவில் சக்திஅழைத்தல்,திருவிளக்கு வழிபாடு,சரஸ்வதி பூஜை,ஆயுதபூஜை உட்பட பல்வேறு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியான அலகு சேவை எனப்படும் கத்திபோடும் நிகழ்ச்சியும் இன்று நடைபெற்றது.ஸ்ரீ ராமலிங்க சௌடாம்பிகையம்மன் தங்கள் ஊருக்குள் வந்து அருள் பாலித்து மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்பதற்காக கத்திகளால் தங்கள் கைகளிலும் தோள்களிலும் வெட்டிக்கொண்டு தங்கள் உடலை வருத்தியபடி சிறுவர் முதல் பெரியவர்கள் வரை சௌடாம்பிகை அம்மனை அழைத்தனர்.
பஞ்ச வாத்தியங்கள் முழங்க நெகமம் சக்தி விநாயகர் கோவிலில் துவங்கிய நிகழ்ச்சி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஸ்ரீ சௌடாம்பிகை அம்மன் கோவில் வரை ஊர்வலமாகச் சென்று முடிந்தது. இத்திருவிழாவில் முளைப்பாரி எடுத்தபடி ஏராளமான பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.
Sunday, September 27, 2009
வனஉயிரின வாரவிழா போட்டிகள்
மாணவர்கள் பொதுமக்கள் பங்கேற்பு.!
பொள்ளாச்சி.செப்.27. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தின் சார்பில் வனவிலங்கு வாரவிழாவை முன்னிட்டு ஓவியம்,கட்டுரை,புகைப்படம் மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன.இப்போட்டிகளில் பள்ளி,கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி,பொதுமக்களும் ஆர்வமாகக் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள இந்திராகாந்தி வனவிலங்கு சரணாலயம் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் சார்பாக ஆண்டுதோறும் அக்டோபர் முதல் வாரத்தில் வனவிலங்கு வாரவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.
இந்த ஆண்டும் வனவிலங்கு வாரவிழாவை முன்னிட்டு பொள்ளாச்சி,வால்பாறை மற்றும் உடுமலையில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்களிடையே வனம் மற்றும் விலங்குகள்,மனித வாழ்க்கைக்கு அவற்றின் தேவைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக,பல்வேறு போட்டிகளையும் வனத்துறை நடத்தியது.
குறிப்பாக வனங்களில் விலங்குகள்,இயற்கைச் சூழலும் -வனவிலங்குகளும், மனிதனும் சுற்றுச்சூழலும் ஆகிய தலைப்புகளில் நடைபெற்ற ஓவியப் போட்டிகளில் மாணவ,மாணவியர் மட்டுமின்றி இப்பகுதிகளில் வசிக்கும் பெண்கள் உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டு வண்ணங்களால் தங்கள் எண்ணங்களை ஓவியமாக்கி,அதைப்பிறருக்கும் உணர்த்தினர்.
மேலும் கட்டுரை,புகைப்படம்,பேச்சு,மற்றும் விநாடிவினாப் போட்டிகளிலும் திரளாகக் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
ஆனைமலை புலிகள் காப்பக களஇயக்குனர் திரு.பசுவராஜ் தலைமையில் நடைபெற்ற இப்போட்டிகளில்,கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவ மாணவியருக்கும் பொதுமக்களுக்கும் பின்னர் வனத்துறை சார்பில் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
Friday, September 25, 2009
எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி.செப்.25. ஆயுள்காப்பீட்டுக்கழக முகவர்களாகப் பணியாற்றுபவர் களுக்கு அளிக்கப்பட்டு வரும் கமிஷன்தொகையை ரத்து செய்யும் விதத்தில் பரிந்துரை செய்த ஸ்வரூப் கமிட்டியைக் கண்டித்தும் அப்பரிந்துரைகளை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஆயுள்காப்பீட்டுக் கழக முகவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆயுள் காப்பீட்டுக் கழக முகவர்களாக அகிலஇந்திய அளவில் சுமார் 13 லட்சம்பேர் பணியாற்றிவருகின்றனர்.பொதுமக்களிடமிருந்து இவர்கள் பெறும் பாலிசியின் அடிப்படையில் முகவர்களுக்கு கமிஷன் தொகை வழங்கப்படுகிறது.
கடந்த பல ஆண்டுகளில் இக் கமிஷன் தொகை முதலில் 25 சதவீதமாக இருந்து பின்னர் 10 சதவீதமாகவும்,அதனையடுத்து வெறும் 2 சதவீதமாக மட்டுமே தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வரும் 2011.ஆம் ஆண்டு முதல் முகவர்களுக்கு ஆயுள் காப்பீட்டுக்கழகத்திலிருந்து கமிஷன் தொகை வழங்கப்படமாட்டாது என்றும் பாலிசிதாரர்களாகிய பொதுமக்களிடமிருந்து கமிஷன் தொகையைய் பெற்றுக் கொள்ளவேண்டும் என்றும் ஸ்வரூப் கமிட்டி பரிந்துரைத்துள்ளது.
தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் பெருகிவரும் நிலையில் பொதுத் துறையாக ஆயுள் காப்பீட்டுக் கழகத்தை முடக்கும் வகையில் அமைந்துள்ள ஸ்வரூப் கமிட்டியைக் கண்டித்தும்,அதன்பரிந்துரையை மத்தியஅரசு அமல்படுத்தக்கூடாது என வலியுறுத்தியும் கோவை மாவட்டம் பொள்ளாச்சி-பாலக்காடு சாலையிலுள்ள ஆயுள்காப்பீட்டுக் கழகம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆயுள் காப்பீட்டுக் கழக முகவர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 100.க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை விளக்கி முழக்கங்கள் எழுப்பினர்.
Wednesday, September 23, 2009
மேற்குத் தொடர்ச்சி மலைகளை பாதுகாக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேண்டுகோள்.!
பொள்ளாச்சி.செப்.23. கோவை,திருப்பூர் உட்பட நான்கு மாவட்டங்களுக்கும் தேவையான நீராதாரத்தை வழங்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளையும் வனங்களையும் பாதுகாக்க பள்ளி,கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு தேவையென வலியுறுத்தி சுற்றுச்சூழல் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துவருகிறது.
கோவை,திருப்பூர்,ஈரோடு மற்றும் கரூர் ஆகிய நான்கு மாவட்டங்களிலுள்ள சுமார் 4.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் பி.ஏ.பி.பாசனத்திட்டத்தின் மூலம் பாசனம் பெற்றுவருகின்றன.இப்பாசனத்திட்டத்திற்கு ஆதாரமான நீர்வளத்தை மேற்குத் தொடர்ச்சி மலைகளும் அது சார்ந்த வனப்பகுதிகளுமே வழங்கிவருகின்றன.
இதேபோல் இம்மாவட்டங்களில் பாயும் நொய்யலாறு,சிறுவாணி, மோயாறு,பவானியாறு,அமராவதி உள்ளிட்ட நதிகளின் மூலாதராமாகவும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் விளங்கி வருகின்றன.
இந்நிலையில்,மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கும் வரும் சுற்றுலாப்பயணிகளால் வனப்பகுதிகளில் காட்டுத்தீ பரவுவதும்,வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதும், சாதாரணமாக நிகழ்ந்து வருகிறது. மேலும் சில பகுதிகளில் நகரங்களின் விரிவாக்கம் காரணமாக நேரடியாக வனப்பகுதிகள் அழிக்கப்படுவது போன்ற காரணங்களால்,இயற்கையின் சமநிலையில் விரும்பத்தகாத மாற்றங்கள் ஏற்படுகின்றன.
இதேபோன்று தென்னிந்தியா முழுவதிலும் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருவதால் இப்பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது.
புவி வெப்பமடைவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உலக நாடுகள் கவலையடைந்து வரும் நிலையில்,பள்ளி,கல்லூரி மாணவர்கள் தங்கள் பகுதியிலுள்ள மலைகளையும்,வனங்களையும் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பெறுவதோடு,இதுகுறித்த செய்திகளை பொதுமக்களிடையே எடுத்துரைக்க வேண்டும் என்றும் இதன்மூலம் புவி வெப்பமடைவதைத் தடுக்க குறிப்பிடத்தக்க பங்காற்றமுடியும் என்றும், கோவை மாவட்டத்தில் இயங்கிவரும் ஓசை என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு மாணவர்களை சந்தித்து வேண்டுகோள் விடுத்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலுள்ள என்.ஜி.எம்.கல்லூரி மாணவ,மாணவியர்களை சந்தித்த ஓசை அமைப்பின் தலைவர் திரு.கே.காளிதாஸ் பி.ஏ.பி.பாசனத்திட்டத்திற்கு ஆதாரமாக உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளை பாதுகாப்பது குறித்தும்,இதற்காக மாணவர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் விளக்கினார்.
மேலும் கோவை,ஈரோடு,திருப்பூர் மாவட்டங்களின் நீராதாரங்களின் பிறப்பிடமாகவும்,கன்னியாகுமரி முதல் மகாராஷ்ட்ரா வரையிலுள்ள மாநிலங்களுக்குரிய நதிகளையும் தரும் மேற்குத் தொடர்ச்சிமலைகளைப் பாதுகாக்க வலியுறுத்தியும் மாணவர்களிடையே தொடர் பிரச்சார இயக்கங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்த திரு.காளிதாஸ் இம்மலைப்பகுதிகளில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்படும்போது,இங்குள்ள உயிர்ச்சூழலுக்கு தீங்கு ஏற்படாத வண்ணம் பாதுகாப்பது குறித்தும் மாநிலஅரசுகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
Tuesday, September 22, 2009
சி.ஐ.டி.யு. ஆர்ப்பாட்டம்
வலியுறுத்தி சி.ஐ.டி.யு. ஆர்ப்பாட்டம்.!
பொள்ளாச்சி.செப்.23. சாலை விபத்துகளின்போது மற்ற காரணங்களை ஆய்வு செய்யாமல், வாகன ஓட்டுனர்கள் மட்டுமே விபத்துக்கு காரணம் என்று கூறி ஓட்டுனர்உரிமத்தை ரத்துசெய்வதும்,சம்பந்தப்பட்ட ஓட்டுனருக்கு 10 ஆண்டுகால சிறைத் தண்டணை விதிக்க வேண்டும் என்று சட்ட அமைச்சகம் செய்த பரிந்துரையை ரத்து செய்ய வலியுறுத்தியும்,கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சி.ஐ.டி.யு சாலைப் போக்குவரத்து மோட்டார் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சி.ஐ.டி.யு- சாலைப் போக்குவரத்து மோட்டார் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின்போது,சாலை விபத்துகள் நடைபெறும்போது மற்ற காரணங்களைக் குறித்து ஆய்வு செய்யாமல் வாகன ஓட்டுனர் மட்டுமே விபத்துக்கு காரணம் என்று கூறி அவருடைய ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வதையும்,
சம்பந்தப்பட்ட ஓட்டுனருக்கு,சட்ட அமைச்சகம் பரிந்துரைத்த பத்து ஆண்டு காலம் சிறைத் தண்டனையையும் ரத்துசெய்ய தமிழகஅரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மேலும்,சாலைப்போக்குவரத்து மோட்டார் தொழிலாளர்களுக்கு தனிநலவாரியம் அமைக்கவும்,பணிநேரத்தில் விபத்து ஏற்பட்டு உயிர் இழக்கும் ஓட்டுனர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவியும் வழங்க தமிழகஅரசு முன்வரவேண்டும் என்றும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப் பட்டது.
சி .ஐ.டி.யு போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தின் நிர்வாகிகளான ஜி.பழனிச்சாமி,சேதுராமன்,பி.கே.சுகுமாரன், உட்பட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
Sunday, September 20, 2009
பாரதப் பிரதமர் விருது பெற்ற விஜயகுமாருக்கு பாராட்டுவிழா.!
மத்தியஅரசு விருதுபெற்ற கல்வியதிகாரிக்கு பாராட்டுவிழா.!
பொள்ளாச்சி.செப்.20 - 2007-2008.ஆம் ஆண்டிற்கான பாரதப்பிரதமர் விருதுபெற்ற,அனைவருக்கும் கல்வித்திட்ட அதிகாரி திரு.எம்.பி.விஜயகுமாருக்கு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில்,பண்ணாரி குழுமங்களின் தலைவர் எஸ்.வி.பாலசுப்ரமணியம் தலைமையில் பாராட்டுவிழா நடைபெற்றது.இதில் மாவட்ட ஆட்சியர் உமாநாத்,பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் உட்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் கல்வித் திட்டத்தை தமிழகத்தில் சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக 2007-2008.ஆம் ஆண்டிற்கான விருது,தற்போது ஓய்வு பெற்ற கல்வித்துறை அதிகாரி எம்.பி.விஜயகுமாருக்கு சமீபத்தில் வழங்கப்பட்டது. இதற்காக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பாராட்டுவிழா நடைபெற்றது.
பண்ணாரியம்மன் குழுமங்களின் தலைவர் எஸ்.வி.பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மாவட்டஆட்சியர் உமாநாத்,பாரதிய வித்யாபவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர்,பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டு தங்கள் பாராட்டுதல்களைக் குறிப்பிட்டனர்.
மாவட்டஆட்சியர் உமாநாத்,தனது பாராட்டுரையின்போது,தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக,செயல்வழிக்கற்றல் முறையின் மூலம், அரசுப் பள்ளிமாணவர்களும் கல்வியில் முன்னேற்றம் காண உதவியவர் எம்.பி.விஜயகுமார் எனக் குறிப்பிட்டார்.
இதனையடுத்து ஏற்புரை வழங்கிய விஜயகுமார்,அனைவருக்கும் கல்வித்திட்டத்தினை தமிழகத்தில் சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்கு தனக்கு உதவியாக பணிபுரிந்த மேற்பர்வையாளர்கள்,ஆசிரியப்பயிற்றுனர்கள் உட்பட அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
இவ்விழாவின் ஒரு பகுதியாக பொதிகை மன்றம் என்ற அமைப்பும் துவங்கப்பட்டது.பின்னர்,கல்வி கற்க முடியாமல் இடைநின்ற மாணவர்கள் சிலருக்கு,இவ்வமைப்பின் மூலம் கல்வியை மீண்டும் தொடர்வதற்கு வசதியாக நிதியுதவியும் அளிக்கப்பட்டன.இதற்கான காசோலைகள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் உமாநாத் வழங்கினார்.
Saturday, September 19, 2009
குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டம்
பொள்ளாச்சி.செப்.19 கோவை மாவட்டம் பொள்ளாச்சியருகே முறையான குடிநீர்விநியோகத்தை வலியுறுத்தி பொள்ளாச்சி-கோவை சாலையில் அப்பகுதி பொதுமக்கள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் சுமார் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ளது ஆச்சிபட்டி ஊராட்சி.இங்கு சுமார் 3 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன.இந்நிலையில் இப்பகுதிக்கு 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை அரை மணிநேரம் மட்டுமே குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது என்று புகார் தெரிவித்த அப்பகுதி பொதுமக்கள் சுமார் 200 பேர், இன்று பொள்ளாச்சி-கோவை சாலையிலுள்ள சேரன்நகர்ப்பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து போக்குவரத்தும் முடங்கியது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.அப்போது தங்களுக்கு போதுமான அளவு குடிநீர் விநியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இதனையடுத்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து அரை மணிநேரம் நடைபெற்ற சாலைமறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
Thursday, September 17, 2009
பழமையான சுமை தூக்கியை அருங்காட்சியகத்தில் வைக்க கோரிக்கை
கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலுள்ள ரயில்நிலையம், கடந்த 1872.ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் கோவையில் துவங்கப்பட்ட ரயில்நிலையத்தின் ஒருபகுதியாக துவங்கப்பட்டது. கோவையிலிருந்து பொள்ளாச்சி வழியாக திண்டுக்கல் வரையும்,பொள்ளாச்சியிலிருந்து கேரளமாநிலம் பாலக்காடு செல்லும் வகையிலும் மீட்டர்கேஜ் இருப்புப் பாதைகள் அமைக்கப்பட்டன.
பொள்ளாச்சி,உடுமலை பகுதியில் விளையும் நெல்,கரும்பு,வாழை மற்றும் தேங்காய்கள், வால்பாறையில் விளையக்கூடிய தேயிலை மற்றும் வனப்பகுதிகளில் விளையும் தேக்கு மரங்கள் ஆகியவற்றை சென்னை,கல்கத்தா உட்பட பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லும் வகையில் இப்பாதைகளை அப்போதைய ஆங்கிலேய அரசு அமைத்தது.இவ்வகையில் பொள்ளாச்சி ரயில் நிலையம் ஒரு பிரதான இடத்தை வகித்தது என்பது வரலாறு.
இந்த ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்படும் பொருட்களை ரயில் பெட்டிகளில் ஏற்றுவதற்கு வசதியாக,கடந்த 1863.ஆம் ஆண்டு இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட சுமைதூக்கியை ஆங்கிலேயர்கள் 1872.ஆம் ஆண்டு இங்கு நிறுவினர்.
மனிதர்களால் இயக்கப்படும் வகையில் அமைந்த இந்த சுமைதூக்கியின் பல்சக்கரங்கள் உட்பட சில உதிரிபாகங்கள் இரும்பால் ஆனதாக இருந்தாலும்,பிரதானமாக எடையை தூக்கும் பகுதி முழுவதும் மரத்தால் ஆனது என்பதும், இதன் மூலம் சுமார் 5 டன் எடை வரையுள்ள பொருட்களைத் தூக்கமுடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சுமைதூக்கியை எவ்வித பழுதுமின்றி இதுவரை பயன்படுத்தி வந்த ரயில்வே நிர்வாகம், தற்போது கோவை பொள்ளாச்சி திண்டுக்கல் அகலரயில்பாதை அமைப்பதற்கான பணிகளை துவங்கியுள்ள நிலையில் இங்கு பயன்படுத்தமுடியாத நிலையிலுள்ள ரயில்பெட்டிகள்,மற்றும் இரும்புப்பொருட்களை தனியாருக்கு ஏலம் விட முயற்சித்து வருகிறது.அந்தப் பட்டியலில் சுமார் 150 ஆண்டுகள் பழமையான இந்த சுமைதூக்கியையும் சேர்த்துள்ளது.
இதனால் அதிருப்தியுற்ற பொதுமக்கள் பழமைவாய்ந்ததும்,இன்னும் நல்ல நிலையில் இயங்கிக்கொண்டும் இருக்கும் இந்த சுமைதூக்கியை அருங்காட்சியகத்தில் வைத்து பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் பராமரிக்க வேண்டும் அல்லது ரயில்நிலையத்தின் முன்பாக ஒரு நினைவுச்சின்னமாக வைக்க மத்தியஅரசும்,ரயில்வே நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tuesday, September 15, 2009
தொழில் வர்த்தக சபை ஆண்டுவிழா.!
பொள்ளாச்சியை சுற்றுலாமையமாக்க வேண்டும்
தொழில் வர்த்தகசபை வலியுறுத்தல்.!
பொள்ளாச்சி.செப்.15. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சுற்றுலாமையமாக அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபையின் 28.ஆம் ஆண்டு விழா,இதன் தலைவர் திரு.ஜி.டி.கோபால கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இதில், பொள்ளாச்சியை சுற்றுலா மையமாக அறிவித்து அதற்கான அலுவலகத்தையும் பொள்ளாச்சியில் அமைக்க தமிழக அரசு முன்வரவேண்டும் என்றும்,பொள்ளாச்சி நகரை சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் பாதுகாக்கும் வகையில் பசுமைபொள்ளாச்சி என்ற திட்டத்தை நகராட்சி சார்பில் துவங்கி அரசு அதிகாரிகள்,தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்,கல்லூரி மாணவ மாணவியர்,வர்த்தக அமைப்புகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்படவும் தமிழகஅரசு முன்வரவேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
மேலும் திருப்பூரில் இயங்கிவரும் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை பொள்ளாச்சியில் அமைக்கவும்,பொள்ளாச்சி-பாலக்காடு-திண்டுக்கல்-கோவை அகலரயில் பாதை திட்டப்பணிகளை விரைவில் முடிக்கவும் மத்திய மாநில அரசுகள் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக மறைந்த ஆந்திர முதல்வர் திரு.ராஜசேகரரெட்டியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்நிகழ்ச்சிகளில் பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபையின் நிர்வாகிகளும்,உறுப்பினர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.
Monday, September 14, 2009
மலைவாழ் மக்கள் கோரிக்கை
மலைவாழ் மக்கள் கோரிக்கை.!
பொள்ளாச்சி.செப்.14 கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்களின் குடியிருப்புகளுக்கு அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தி,பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் மனுக்கள் அளிக்கப்பட்டது.இது குறித்து வனத்துறை அலுவலர்களிடம் கலந்தாலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ளது இந்திராகாந்தி வனவிலங்குச் சரணாலயம் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகம்.இங்குள்ள வனப்பகுதிகளில் 23.க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன. இக்குடியிருப்புகளுக்குரிய குடிநீர் உட்பட அடிப்படைவசதிகள் மற்றும் சாலைகள் ஆகியவற்றையும்,தங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ள தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு மின்வசதியும் தேவை என, இன்று-14.09.09- நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் மலைவாழ்மக்கள் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.
மேலும் வனத்தில் விளையும் பொருட்களை சேகரிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையையும் அகற்ற அரசு நடவடிக்கை தேவை எனவும் வலியுறுத்தப்பட்டது.
இதனையடுத்து மலைவாழ்மக்களின் கோரிக்கைகளைக் குறித்து,வனச்சரக அதிகாரிகள் திரு.சிவமணி,திரு.தங்கராஜ்பன்னீர் செல்வம், திரு.சிவக்குமார், திரு.வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்ட ஆலோசனைக்கூட்டம் ஒன்றும் சார் ஆட்சியர் திரு.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.
மலைவாழ் மக்களின் கோரிக்கைகள் குறித்தும்,வனப்பகுதிகளில் மேற்கொள்ளக் கூடிய பணிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அம்சங்களுக்கு எதிரான கோரிக்கைகள் ஆகியவற்றைக் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இதனையடுத்து உரிய பரிசீலனைக்குப் பிறகு மலைவாழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சார்ஆட்சியர் திரு.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
Saturday, September 12, 2009
டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணியிட மாறுதல்
கடந்த மூன்று ஆண்டுகளாக டாஸ்மாக்கில் பணிபுரியும் ஊழியர்கள் பணியிட மாறுதல் கோரி வந்ததை அடுத்து தமிழக அரசின் உத்தரவுப்படி இவர்களுக்கான கலந்தாய்வு முகாமை கோவை மண்டல மேலாளர் திரு குமாரவேல் பாண்டியன் மற்றும் மாவட்ட மேலாளர் திரு.சம்பத் ஆகியோர் நடத்தினர்.
இதில் பொள்ளாச்சியிலுள்ள அறுபது கடைகளின் ஊழியர்கள் கலந்து கொண்டதில் 29 பேர் பணியிட மாறுதல் உத்தரவு பெற்றனர். இது போன்ற முகாம்களை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் நடத்த உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Friday, September 11, 2009
பாரதியின் நினைவை போற்றுவோம்.!






" கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி" - பாரதி
"He who writes poetry is not a poet. He whose poetry has become his life, and who has made his life his poetry - it is he who is a poet." - Bharathy
ஜாதி மதங்களைப் பாரோம் -
உயர் ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே -
அன்றி வேறு குலத்தின ராயினும் ஒன்றே
We shall not look at caste or religion, All human beings in this land
whether they be those who preach the vedas or who belong to other castes - are one. MAHA
KAVI BHARATHI.
127 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாடு உலகிற்கு ஓர் ஓப்பற்ற கவியை – மகாகவி சுப்பிரமணிய பாரதியை - பெற்றுத்தந்தது. இன்று சி.சுப்பிரமணிய பாரதியார் பிறந்து 127 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.
1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி எட்டயபுரத்தில் சின்னச்சாமி ஜயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் மகவாகப் பிறந்தார். ஜந்து வயதாக இருக்கும் போதே தாயாரை இழந்துவிட்டார்.
இவர் இந்த மண்ணில் வாழ்ந்ததோ 39 ஆண்டுகள் மாத்திரமே. ஆனாலும் இந்தக் குறுகிய கால வாழ்வில் இவர் சாதித்தவையே இவரை மகாகவியாக இனம்காண வைத்தன. திறமான புலமையெனின் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும் என்பது பாரதியின் அளவுகோல்களில் ஒன்று . அப்படியான வெளிநாட்டாரான செம்யோன் ருஷிதின் என்னும் றஸ்சிய அறிஞர் பின்வருமாறு எழுதினார்.
"இருபதாம் நூற்றாண்டின் முதல் இருபது ஆண்டுகளில் தமிழ் இலக்கியத்தில் ஓர் இலக்கியப் புரட்சியே நிகழ்ந்தது ; தமிழ் இலக்கியம் புத்துயிர் பெறும் , புதிய தற்கால உள்ளடக்கத்தையும் , புதிய வடிவங்களையும் பெறும் ஒரு திட்டவட்டமான மாற்றம் தொடங்கியது. இந்த மாற்றத்தை மகாகவி சுப்பிரமணிய பாரதியின் படைப்புக்களிலிருந்து பிரித்துவிட முடியாது. தேசபக்தி , சர்வதேசியத்துவம் , சுதந்திரம் , சமுக நீதி , மற்றும் மொழியை ஜனநாயகமாக்குவது , கவிதை மற்றும் வசனத்தின் நடையை ஜனரஞ்சகமாக்கவது போன்ற கருத்துக்கள் யாவுமே அவரது பெயரோடு சம்பந்தப்பட்டவையேயாகும்."
பாரதிக்கு முன்னால் தமிழ்க் கவிதையானது ஆதீனங்களிலும் , குறுநில மன்னர்களின் அரண்மனைகளிலும் , எடுத்த மாத்திரத்தே எதுகை, மோனைகளை தம்வசப்படுத்தி கவிபாடவல்ல பண்டிதர்களிடத்திலும் சிறைப்பட்டுக் கிடந்தது.
கிடக்கவே அந்தக் கவிதைகளின் பாடுபொருளும் தெய்வங்களாகவும், குறுநிலமன்னர்களாகவும் , அவர்களுக்கு இன்பம் ஊட்டவல்ல வஸ்துக்களாகவும் இருந்ததைக் காண்கிறோம். எண்ணில் அடங்காத் தலபுராணங்கள் எழுந்ததும் இக்காலங்களில்தான்.
இதற்குப் பல நூற்றாண்டுகளின் முன்னர் தமிழ்நாடு மாபெரும் கவிஞர்களும், மனிதாபிகளுமான வள்ளுவர், கம்பர், இளங்கோ, அவ்வையார், ஆழ்வார்கள், நாயன்மார்கள், தாயுமானவர் போன்றோரை பெற்றிருந்தது.
இவர்களை இழந்துவிடாமல் அதேசமயம் தன் காலத்தின் தேவைகளுக்கு இலக்கியத்தை, மொழியை ஆட்சிப்படுத்தவேண்டிய காலத்தின் முத்திரையை பாரதி பதித்தார். இதுவே இவரை பிறரில் இருந்து வேறுபடுத்தி மக்கள் கவியாக, மகாகவியாக, மறுமலர்ச்சிக்கவியாக, தேசியக்கவியாக, மானிடத்தின் குரலாக, பர்ணமிக்க வைத்தது.
"கலைத் துறையில் துணிவோடிருப்பது மிகவும் அவசியம். இல்லாவிட்டால் அற்பமானவற்றைத் தவிர வேறு ஆர்வமாஃனவை எதையும் நீங்கள் படைத்துவிட முடியாது " என்று கூறினார் லியோ டால்ஸ்டாய். இதற்குத் துணிவுவேண்டும். பாரதியிடம் இருந்த துணிவாற்றலே தன் சாதியையும் சமுகத்தையும் எதிர்து நின்று கவிதைபாட முடிந்தது.
'உலகின் ஒப்புக்கொள்ளப்படாத சட்டவரைஞர்களே கவிஞர்கள் " என்றான் பாரதியால் போற்றப்பட்ட ஆங்கிலக்கவிஞர்களில் ஒருவரான ஷெல்லி. வேதாந்தக்கனியான பாரதியோ
எனக்குத் தொழில் கவிதை , நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்
எனப் பாடுகின்றார். தன்வினையை கருமயோகமாக மாற்றிய இவரது வெற்றியே இவரை மற்றவர்களிடம் இருந்து பிரித்துப்பார்க்கவும் இவரது மேதாவிலாசத்தை புரிந்துகொள்ளவும் வழிசமைக்கின்றது எனலாம்.
இந்தப் பிரபஞ்சத்தை தன்வசப்படுத்தும் சக்தி மனித ஆற்றுலுக்கு உண்டு என்பதை இவரது படைப்புக்கள் அனைத்திலும் பரக்கக்காணலாம். இதனால் தான் ' எத்தனைகோடி இன்பம் வைத்தாய் இறைவா " என்றும் "நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை நோக்க நோக்கக் களியாட்டம் " என்றும் பாடிய கவிஞனே ' தனியொருவனுக்கு உணவில்லையெனின் இந்த சகத்தினையே அழித்துவிட " துணிகின்றான்.
அவ்வப்போது பிரபஞ்சத்தின் அழகில்மயங்கி பரவசப்படும் கவிஞன் அந்தப் பரவசத்தின் மத்தியிலும் தூக்கிய கொடியை கீழே போட்டுவிடவில்லை.
இவரது அற்புதமான ஞானரதம் என்னும் படைப்பு இதற்கு சான்றுபகர்கின்றது. தேசபக்தியே தெய்வபக்தியாகி தேசத்தின் விடுதலையே எல்லாவிடுதலைகளுக்கும் ஆதாரம் என்பதில் அவன் என்றுமே தளம்பியதில்லை.
இத்தாலியப் பெரும் கவிஞனான தாந்தே தனது Divine Comedy என்னும் அமரகாவியத்தில் நரகலோகம், சுத்திகரிப்பு உலகம், சுவர்க்கம் ஆகிய மூன்று உலகத்திலும் பிரவேசிக்கின்றான்.
இந்தப் பயணத்திற்குத் துணையாக வேர்ஜில் என்னும் கவிஞனையும் தன்காதலான பியற்றீசையும் துணைகொள்கின்றான். பாரதியும் தன் ஞானரதத்தில் ஏறி உலகை வலம்வரத் துணிந்தபோது காளிதாசனையும் ஏதாவது ஓர் உபநிடதத்தையும் படிக்க விளைகின்றான். ஞானம், அழகு என்னும் படிமங்களின் துணைகொண்டு பிரபஞ்சத்தினை அனுபவிக்க இரு கவிஞர்களும் துணிகின்றனர்.
"ஞானரத" த்தில் ஏறிக்கொண்டு உலகின் துன்ப துயரங்களில் இருந்து விடுபட்டு மேலும் மேலும் பறந்து செல்கிறான் கவிஞன். அங்கு தர்மலோகத்துள் தர்மராஜாவின் முகத்திலும் இந்திய விடுதலைக்காக தீவிரவாதத்தைக் கைக்கொண்ட பாலகங்காதர திலகரின் சாயலையை தரிசிக்கின்றார். ' மோகமான பரவசத்தில் " ஒரு கணம், மறுகணம் பூமியல் வந்து விழுகின்றான்.
இன்று இத்தனை ஆண்டுகளின் பின்னரும் பாரதியின் குரல் தமிழ்கூறும் நல்லுலகம் எங்கணும் ஒலித்தபடி இருப்பதன் மகிமைதான் என்ன.
அவரால் வாஞ்சையோடு தம்பி என்று அழைக்கப்பட்ட பரலை நெல்லையப்பபிள்ளை 100 ஆண்டுகளுக்கு முன்னரே கண்ணன் பாட்டிற்கு எழுதிய முகவுரையில் ' பாரதியார் பாடல்களின் பெருமையைப் பற்றி யான் விரித்துக் கூறுவதென்றால், இந்த முகவுரை அளவுகடந்து பெரிதாய்விடும். ஒரு வார்த்தைமட்டும் கூறுகின்றேன். இந்த ஆசிரியன் காலத்திற்குப்பின், எத்தனையோ நூற்றாண்டுகளுக்குப்பின், இவர் பாடல்களைத் தமிழ்நாட்டு மாதர்களும் புருஷர்களும் மிகுந்த இன்பத்துடன் படித்துக் களிப்படையும் காட்சியை யான் இப்பொழுது காண்கின்றேன் " எனக் கூறியுள்ளதை நினைவுகொள்கின்றேன்.
' பாரதியாரின் கீதம் தமிழுக்கு உயிர்கொடுத்தது. அதைப்பாடிக்கொண்டே தேசத்திற்காக தடியடி பட்டோம். சிறைசென்றோம். பாரதியின் கீதத்தைப் பார்த்த ஒரு மலையாள ஹைகோட் நீதிபதி இந்த அடிகளை எவராவது பாடினால் உடனே புரட்சி ஏற்பட்டுவிடும் எனக் கூறினார் " எனகிறார் ஒருவர்.
' இளங்கோவடிகள், கம்பர் என்னும் மலர்களைத் தந்த தெய்வத்தரு " ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்தபின்னர் வாராத வந்த செல்வத்தைப்போலப் பாரதியார் என்னும் மலரை அளித்திருக்கின்றது. இம்மலரை நாம் பிறர் சொற்கேட்டுத் தோற்றுவிடுவோமோ " என ஏங்கினார் விபலானந்த அடிகளார்.
' புல்லை நகையுறுத்தி, பூவை வியப்பாக்கி, மண்ணைத்தெளிவாக்கி, நீரல் மலர்ச்சிதந்து, விண்ணை வெளியாக்கி " இவன் செய்த விந்தைக் கவிகள் எம் இனத்தின் சொத்து. நாம் உலகிற்கு வழங்கக்கூடிய செல்வம். மண்ணிலே வேலிபோடலாம், வானத்திலே போடலாமா? போடலாம் என்கிறான் ராமகிருஸ்ணமுனி. ' மண்ணைக் கட்டினால் வானைக்கட்டியதாகாதா? மண்ணிலும் வானம்தானே நிரம்பியிரக்கின்றது " என்கிறார் பாரதி. வானத்தை இவ்வுலகில் இருந்தபடியே தீண்டுகிறான் கவிஞன். இதனால் தான் இவனது கவிதைக் கூட்டிற்கு ' கள்ளும், தீயும், காற்றும் ,வானவெளியும் " கலவைகளாகின்றன.
பாரதி ஆய்வில் தம்மைப் பறிகொடுத்தவர்களில் ஒருவரான டாக்டர் எல். புச்சிக்கினா ' பாரதி தம் ஆத்மாவைச் செம்மைப்படத்திக் கொள்ளும் பயிற்சியை மேற்கொண்டது இநத உலகைத் துறப்பதற்காக அல்ல் மாறாக அதற்கு மேலும் தகுதியாவதற்காகவே, தமது தாய்நாட்டின் தேசிய,சமுக விடுதலையை எய்த வேண்டிய உன்னதமான பணிக்குத் தம்மைத் தகுதியாக்கிக் கொள்வதற்காகவேதான் " எனக் கூறியுள்ளமை மனம்கொள்ளத்தக்கது.
" சொல்லடி, சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்
வல்லமை தாராயோ ? – இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே....."
சாவின் பிடியிலும் காலனை அழைத்து அவனைக் காலால் உதைத்த இந்த அமர கவி காலத்தைக் கடந்து தான் வாழ்வேன் என உறுதியாக நம்பினான். அவனுக்கு அதற்கான உரிமை முற்றிலும் இருந்தது. ஏனெனில் தனக்கு முன்பிருந்த கவிச்செல்வம் எல்லாவற்றையும் தனதாக்கி, நன்மையும் அறிவும் எங்கிருந்தாலும் அவற்றை தன்வசப்படுத்தி ,பிறநாட்டுக் கவிஞர்களான ஷெல்லி, கீட்ஸ், பைரன் (ஆங்கில ) எமில் வர்ஹரன் (பெல்யியம்) விட்மன், மிஸ் ரீஸ் (அமெரிக்க) மற்றும் தன்காலத்தைச் சார்ந்த யப்பானிய கவிஞனின் ஆங்கிலக் கவிதைகள் என எங்கும் எதிலும் அவன் பார்வை பட்டுத்தெறித்ததை அவனது கவிதைகளிலும் கட்டுரைகளிலும் காணமுடிகின்றது.
இலக்கியத்திற்குரிய சமுதாயப் பணியையும் , காலத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் அதன் தாற்பரியத்தையும் எந்தவொரு இந்தியக் கவிஞனும் கூறாத வகையில் :
" காலத்திற்கேற்ற வகைகள் – அவ்வக்
காலத்திற் கேற்ற ஒழுக்கமும் நூலும்
ஞால முழுமைக்கும் ஒன்றாய் – எந்த
நாளும் நிலைத்திடும் நூலொன்றும் இல்லை " எனக்
கூறியுள்ளமை வியப்பைத் தருகின்றது. இருப்பினும் இவனது கவிதைபின் பொருளே மனிதன் என்பதால், இவன் கூறிய நிலைக்கு மானிடம் நகரும் வரை அந்த வரலாற்றின் முடிவுவரை இவனது கவிதைகள் உயிரோடு உலாவும்.
இந்த இடத்தில் வோல்ராயர் (Voltaire ) என்னும் அறிஞனைப் பற்றி விக்ரர் கிêகோ (Victor Hugo -1802-1885) என்னும் இன்னோரு பிரான்ஸ் நாட்டு அறிஞன் கூறிய
" ....He was more than a man, he was an age. He had exercised a function and fullfilled a mission. He has been evidently chosen for the work which he had done by the supreme will, which manifest itself as visibly in the laws of destiny as in the laws of nature ..."
" இவன் ஒரு மனிதனிலிலும் மேலானவன். இவன் ஒரு யுகம். இவன் ஒரு வினையைச் சாதித்து அதன் முலும் ஒரு இலட்சியத்தை நிறைவேற்றினான். உன்னதமான சக்தியின் ஆற்றலால் இவன் செய்த செயலுக்காகத் தெரிவுசெய்யப்பட்டவனே இவன். இது இயற்கையின் விதிகளைப்போன்ற காலத்தின் விதியாகும் . "
என்னும் வார்த்தைகள் எங்கள் பாரதிக்கும் பொருந்தும். தமிழ் மக்கள் செய்த தவப்பயனால் வந்துதித்த இந்தக் கவிஞனால் இந்த புதுயுகத்து மொழியாகத் தமிழ் பின்வந்தோருக்கு ஆதர்சமாக அமைந்தது.
புரட்சிக்கவி பாரதிதாசன் கூறியது போல், இவன் ஓர் பைந்தமிழ் தேர்பாகன். செந்தமிழ் தேனீ. தமிழர் உள்ளங்களில் இவன் ஓர் பார்த்தசாரதி. பாரதி புகழ் பாடி மகிழ்வோமாக.
Thursday, September 10, 2009
deers in canal
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே கால்வாயில் தவறி விழுந்த இரண்டு மான்கள் மீட்கப்பட்ட காட்சிகள்.
+ miracle elephant is follow to you
இந்திராகாந்தி வனவிலங்கு சரணாலயத்தில் விலங்குகள் கணக்கெடுப்பு குழுவினரை காட்டு யானைகள் விரட்டிய அபூர்வ காட்சிகள்.
Wednesday, September 9, 2009
கயிறு உற்ப்பத்தியாளர்கள்கோரிக்கை
ஆண்டு ஒன்றுக்கு சுமார் 500 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்றும் வருகிறது. அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் ரூ.1000 கோடிக்கு வர்த்தக இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆனால் இப்பொருட்களை ஏற்றுமதி செய்வதற்காக கேரளா மாநிலம் கொச்சி அல்லது தூத்துக்குடி துறைமுகங்களுக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளதால்,கூடுதல் பொருட்செலவும், காலவிரயமும் ஏற்படுவது தவிர்க்கமுடியாததாக உள்ளது.
எனவே, பொள்ளாச்சியை மையப்படுத்தி container fright station எனப்படும் சரக்கு பெட்டக முனையம் ஒன்றை மத்திய அரசு அமைக்கவேண்டும் என்றும்,இதற்க்கு மாநில அரசும் உதவு வேண்டும் என்றும் நார்ப்பொருட்கள் உற்ப்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
Tuesday, September 8, 2009
குளிர் பதன கிடங்கு கிடைக்குமா.?
எனவே நல்ல விலை கிடைக்காத போது,தக்காளியை பதப்படுத்தி வைக்கவும்.விலை வரும்போது அதனை விற்கவும் வசதியாக பொள்ளாச்சி,கிணத்துக்கடவு,உடுமலை பகுதி விவசாயிகள் பயன் பெறும் வகையில் இப்பகுதியில் குளிர்பதன கிடங்கு ஒன்ற கட்டித்தர தமிழக அரசு முன்வரவேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
பொள்ளாச்சி இசைவிழா
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வருடம்தோறும் தியாகராஜ சுவாமிகள் ஆராதனை இசை விழா நடைபெற்று வருகிறது.தமிழகத்தை பொருத்த வரை திருவையாற்றில் நடைபெறும் இசை விழாவிற்கு அடுத்த படியாக பொள்ளாச்சியில் மட்டுமே நூற்றுக்கும் அதிகமான நாதஸ்வர தவில் இசை கலைஞர்கள் ஒன்று கூடி இசை மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ தியாகராஜருக்கு தங்கள் இசையால் ஆராதனை செய்வது குறிப்பிடத்தக்கது.
Monday, September 7, 2009
கருப்பு பணம் -விவாதம்
கறுப்பு ஆடுகளுக்குகொண்டாட்டம்! நா.மு.நாச்சியப்பன், காரைக்குடியிலிருந்து எழுதுகிறார்:
யானையின் வாயில் புகுந்த கரும்பையோ, வேறு உணவையோ திரும்பப் பெற முடியாது என்பது உலகறிந்த உண்மை. அதேபோல, சுவிஸ் வங்கிகளில் நமது அரசியல் புள்ளிகளும், பணக்கார கறுப்புப் பண முதலைகளும் போட்டு வைத்துள்ள பணத்தையும் பெற முடியாது.பா.ஜ., தன் தேர்தல் அறிக்கையில், "சுவிஸ் வங்கிப் பணத்தை மீட்க நடவடிக்கை எடுப்போம்' எனக் கூறியது; எப்படி என்று விளக்கவில்லை. எனவே, "நாம் அமைதியாக இருந்தால், பொதுமக்கள் ஏதும் நினைத்து விடுவரோ...' என பயந்த பிரதமரும், நிதி அமைச்சரும், "பேச்சு வார்த்தை தொடரும், நடவடிக்கை எடுப்போம்' என்று நாடகமாடுகின்றனர்.வங்கிகள் கோடிக்கணக் கில் பணமுதலைகளுக்கு கொடுத்த தொகையை, வராக்கடனில் தள்ளுபடி செய்த இவர்களா, சுவிஸ் வங்கியிலிருந்து லட்சம் கோடிகளில் உள்ள பணத்தை மீட்க நடவடிக்கை எடுப்பர்? அந்த அளவு பொறுப்பு, அரசிடம் நிச்சயம் இல்லை.சுவிஸ் வங்கியின், "எங்கள் நாட்டு வங்கிகளில், பணம் போட்டுள்ள வாடிக்கையாளர்கள் பற்றிய விவரம் எக்காரணம் கொண்டும் தெரிவிக்கப்பட மாட்டாது' என்ற சமீபத்திய அறிவிப்பு, பணம் போட்டுள்ள கறுப்பு ஆடுகளின் கொண்டாட் டத்திற்கு வழி வகுத்துள் ளது.மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கும் எந்தத் தள்ளுபடியும், ஏழைகளைச் சேர்வதில்லை; பெரிய பணக்காரர்களும், கட்சிக்காரர்களும் தான் பலனடைகின்றனர். ஆட்சியில் இருப்பவர்கள், இதை ஆராய்ந்து, தெளிந்து செய்வதில்லை. பொதுமக்கள் பணம் கோடிக்கணக்கில் வீணாவது இது போலத்தான்!
சமச்சீர் கல்வி- விவாதம்
நன்றி தினமலர் நாளிதழ்
பிஞ்சுகளுக்கு விமோசனம், சமச்சீர் கல்வி!ச.ராசன்,
சென்னையிலிருந்து எழுதுகிறார்: மத்திய மனித வளத்துறை அமைச்சர் கபில் சிபல் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தில், விளையாட்டுத் துறை அமைச்சர், உருப்படியான ஒரு யோசனையை தெரிவித்துள்ளார். தினமும் ஒரு முழு பாட வகுப்பை, விளையாட்டிற்கு கட்டாயமாக ஒதுக்க வேண்டும். 1986ம் ஆண்டு கல்விக் கொள்கைபடி, "விளையாட்டு என்பது, கல்வி கற்பித்தலின் ஒரு பகுதி. உடற்கல்வியை முறையாக வழங்க வேண்டும்' என்று வகுக்கப்பட்டுள்ளது. அதிகாலையில் எழுப்பி, படிப்பு, படிப்புக்குப் பிறகு, அதி விரைவாகக் காலைக்கடன், சிற்றுண்டி முடித்து, சீருடை அணிய வேண்டும். பெருஞ்சுமை கூட்டும், கொள்ளை விலை தோள் பை சுமந்து, பள்ளியில் வரிசையாய் பாட வகுப்பு; பாடப் பயிற்சி. பின், மணியடித்து வீடு வந்தால், "ம்... ம்... புறப்படு, "டியூஷன்' வகுப்பு...' என, மணி, மணியான இளஞ்செல்வங்களின் வளர்ச்சியில் கூன் விழுந்து, தங்கக் கூண்டில் அடைத்து வளர்த்த புலி, சிறுத்தை, சிங்கக் குட்டிகளாய், தங்கள் இயல்பிழந்து பூனைகளாய், தேவாங்குகளாய்... பார்க்கவே பரிதாபம்!இந்தப் பிஞ்சுகளுக்கு விமோசனம் தான், "சமச்சீர் கல்வி!'"சமச்சீர் கல்வி' முறையை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும். தமிழகம் அதில், முன்னோடியாய்த் திகழ வேண்டும்; "மெக்காலே' ஆரம்பித்து வைத்த கல்வியின் மிச்சசொச்சமும், முழுவதுமாக மாற்றப்பட வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தும், அரசு உதவி பெறும் நிலையங்களாக வேண்டும்.வாராது வந்துள்ள இந்த வாய்ப்பை, வகையாகக் கல்வித் துறை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இப்படிச் செய்தால், ராகிங், பஸ் டே, அரசியல் சார்ந்த மாணவர் மன்றத் தேர்தல்கள் போன்ற கூத்துகள் ஒழியும். இளைஞர்களின் அளவிட முடியாத பேராற்றல், ஆக்கப்பூர்வமான சிந்தனை செயல்களாக, மடைமாற்றம் பெறும்!வளரும் இளந்தலைமுறை, இந்தியத் திருநாட்டை பேராண்மைமிக்க, மிகப்பெரிய வள நாடாக மலரச் செய்வர்!
Sunday, September 6, 2009
ஆதிவாசி மக்கள் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சியில், தங்களுக்கான அடிப்படை வசதிகள் கோரி ஆதிவாசி மக்கள் நடத்திய ஆட்டமும் பாட்டுமான ஆர்ப்பாட்டம்
கலைஞர் காப்பீட்டு திட்டம்
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கலைஞர் காப்பீட்டு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் திரு.உமாநாத் தொடங்கி வைத்தார். வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மக்கள் அரசால் பரிந்துரைக்கப்பட்ட் மருத்துவ மனைகளில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள சிகிச்சை பெற இத் திட்டம் உதவுகிறது.மாவட்டத்தில் இது போல 37 மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட விலை உயர்வு போதுமானது அல்ல என்று விவசாயிகள் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள சண்முகபுரம் பால் குளிர்வு நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பொள்ளாச்சி நாட்டுக்கல் பாளையத்தில் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு பழங்கால சிலை
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நாட்டுக்கல் பாளையம் பகுதியில் பழங்கால சிலை ஒன்று சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. இதன் வரலாற்றுப்பின்னனி குறித்து தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி மேற்க்கொள்ள வேண்டும் என்பது இப் பகுதி மக்களின் கோரிக்கை.
Saturday, September 5, 2009
pollachi land marks
Friday, September 4, 2009
சத்துணவு ஊழியர்கள் ஊர்வலம்
நீலகிரி,குமரி,ராமேஸ்வரம், கிருஷ்ணகிரி,கடலூர்,நாகப்பட்டினம்,சென்னை,
என 7 முனைகளிலிருந்து புறப்படும் இப் பிரசார பயணம் செப்டம்பர் எட்டாம் தேதியன்று மதுரையில் முடிவடைகிறது.