நடிகர் ஜெயராம் பகிரங்க மன்னிப்புகோர வேண்டும். ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்.!
பொள்ளாச்சி.பிப்.6 நடிகர் ஜெயராம் கேரளாவில் நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது,தமிழ்ப் பெண்களைக் குறித்து,தரக்குறைவாகப் பேசியதைக் கண்டித்தும்,இதற்காக அவர் பகிரங்கமாக தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி,கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஆதித் தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பிரபல மலையாளம் மற்றும் தமிழ்நடிகரான ஜெயராம் கேரளாவில் நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.அப்போது கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஜெயராம்,தமிழ்ப் பெண்களைக் குறித்து தரக்குறைவாக பேசினார்.இது ஒளிபரப்பும் ஆனது. இதனைத் தொலைக்காட்சியில் கண்டபோது,தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும்,ஜெயராமுக்கு எதிராக கண்டணங்கள் தெரிவிக்கப்பட்டன. இதன் ஒருபகுதியாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று ஆதித்தமிழர் பேரவை அமைப்பின் சார்பில்,அதன் மாவட்ட நிர்வாகியான தி.செ.கோபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்ப்பெண்கள் குறித்து தரக்குறைவாகப் பேசிய நடிகர் ஜெயராம் தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும்,அதுவரை வணிக நிறுவனங்கள் அவரை விளம்பரத்திற்காக பயன்படுத்தக் கூடாது என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது. பொள்ளாச்சி கடைவீதியிலுள்ள பிரபல வணிகநிறுவனம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால்,அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொள்ளாச்சி கிழக்கு போலீசார், அனுமதியின்றி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதால்,போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்டுக் கொண்டபோது,இருதரப்பிற்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் நடைபெற்றது.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது.பின்னர் அவர்களைப் போலீசார் கைது செய்தனர்.
No comments:
Post a Comment