மருத்துவக்கழிவுகளுடன் வந்த லாரி சிறைபிடிப்பு.!
பொள்ளாச்சி.ஜுலை.9.கேரளமாநிலத்திலிருந்து,மருத்துவக்கழிவுகளுடன் வந்த லாரி ஒன்றை,கோவை மாவட்டம் பொள்ளாச்சியருகே வழிமறித்து சிறை பிடித்த பொதுமக்கள்,சாலைமறியல் மற்மு; ஆர்ப்பாட்டம் நடத்தியதால்,பொள்ளாச்சி-திருச்சூர் சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து தடைபட்டது.
கேரளமாநிலத்தின் எந்த ஒரு பகுதியிலும் கொட்டக்கூடாது என்று,கேரளஅரசால் தடைவிதிக்கப்பட்ட மருத்துவக்கழிவுகளை,கோவைமாவட்டம் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மர்மலாரிகள் மூலமாகக் கொண்டுவந்து இரவோடிரவாக கொட்டிச்செல்வது வாடிக்கையாக உள்ளது.இதனால் விளைநிலங்கள் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் மாசுபடுவதும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் வியாழன் அன்று இரவு பொள்ளாச்சியை அடுத்துள்ள ஸ்ரீனிவாசபுரம் அருகே,கடுமையான துர்நாற்றத்துடன் வந்த -கே.எல்.9-வி.4086 என்ற எண்ணுள்ள லாரி ஒன்றை, பொதுமக்கள் மறித்து சிறைபிடித்தனர்.இதனையடுத்து லாரியிலிருந்த ஓட்டுனர் இறங்கி,தப்பி ஓடிவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் லாரியின் முன்புறக்கண்ணாடியை உடைத்ததோடு,சக்கரங்களிலிருந்த காற்றையும் பிடுங்கிவிட்டனர். மேலும், பொள்ளாச்சி-திருச்சூர் சாலையிலுள்ள வளந்தாயமரம் சோதனைச்சாவடி வழியாக,மருத்துவக்கழிவுகளுடன் வந்த லாரியை,அதிகாரிகள் அனுமதித்ததாகக் கூறி,கண்டணம் தெரிவித்த பொதுமக்கள்,அவர்கள் மீது அரசு நடவடிக்கை தேவையென்று ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு,சாலைமறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இம்மறியல் போராட்டத்தின் காரணமாக சுமார் ஒருமணிநேரம் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொள்ளாச்சி டி.எஸ்.பி.முத்தழகு மற்றும் போலீசார்,மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம்,இப்பிரச்சினைக்கு தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து மறியல்போராட்டம் கைவிடப்பட்டது.
மேலும்,மருத்துவக்கழிவுகளைக் கொண்டு வந்த லாரியிலிருந்த கிளீனரான கேரளமாநிலம் வயநாடு பகுதியைச் சேர்ந்த சுலைமான்.வயது.20, மற்றும் திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள மஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த முனியப்பன்-வயது.35 ஆகியோரும் கைது செய்யப்பட்டு,பொள்ளாச்சி நடுவர்நீதிமன்றம் என்.2.ல் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் சிறைக்காவலில் வைக்கப்பட்டனர்.
இதனிடையே மருத்துவக்கழிவுகளை ஏற்றிவந்ததாக சிறைபிடிக்கப்பட்ட லாரியில் இருந்தது உரம் தயாரிப்பதற்காக,மாடுகளின் அரைக்கப்பட்ட எலும்புத்துகள்கள் என்பதும்,இவற்றை கேரளமாநிலம் அங்கமாலியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திலிருந்து,திண்டுக்கல் மாவட்டத்திற்கு,முறைப்படியான ஆவணங்களுடன் கொண்டு செல்லப்படுவதாகவும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து,லாரியின் முன்புறக்கண்ணாடியை உடைத்ததற்காக,பெரியார் திராவிடர்கழகத்தை சேர்ந்த நாகராசன் என்பவரும்,பொள்ளாச்சி மேற்கு காவல்நிலையப் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நம்ம ஊர் பரவாயில்லை!
12 years ago
No comments:
Post a Comment