பொள்ளாச்சி .அக்.17-பிறவிக்குறைபாடு,நோய்வாய்ப்படுவது அல்லது விபத்திற்குள்ளாவது போன்ற காரணங்களால் தங்களது பார்வைத்திறனை இழந்து வாழ்பவர்கள் மீது அரசுக்கும்,அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு தேவையென பார்வையற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாற்றுத்திறன் கொண்டவர்கள் என்றழைக்கப்படுபவர்களில் ஒரு பகுதியாக உள்ள, கண்பார்வையற்றேவர்களுக்கு சப்தமும்,தொடு உணர்ச்சியுமே இருகண்களாக உள்ளன. விழியில் ஒளி இல்லை என்ற கவலையற்று வாழததுணிந்த இவர்கள்,தங்கள் அன்றாட வாழ்க்கையில் பார்வையுள்ள மற்றவர்களால் படும் துன்பமும், சிரமங்களும் ஏராளம் என பட்டியலிடுகின்றனர்.
பேருந்துகளில் தங்களுக்கான இருக்கைகளை தர மறுப்பது,தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்திச் செல்லும் செலவுகளுக்காகவும்,மூன்று வேளை உணவுக்காகவும்,பிச்சையெடுக்காமல்,ஒரு தொழில் செய்யும் முனைப்போடு தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு விதிவிலக்கு அளிக்காமல் அரசுப்பேருந்துகளில் கூட லக்கேஜ் எனப்படும் சுமைக்கட்டணம் வசூலிப்பது, விழியற்றிருப்பவர்களுக்கு இன்னொரு கால்போலவும்,மற்றொரு கைபோலவும் தணையாக இருக்கும் ஊன்றுகோல்,விழித்திருப்பவர்கள் மீது தவறுதலாகப்பட்டு விட்டதற்காக அவர்கள் வீசும் வசைச்சொல்லை கேட்டுக்கொள்வது, என்று பொதுமக்களிடையே அன்றாடமும் இவர்கள் பெறும் அனுபவங்களின் பட்டியல் நீள்கிறது.
இதுமட்டுமின்றி வாடகைக்கு வீடு கிடைப்பது என்பது இவர்களைப் பொறுத்தவரை குதிரைக்கொம்பு என்கிறார்கள்.காரணம் பார்வையற்றவர்களால் வீட்டைச் சுத்தமாக வைத்திருக்க முடியாது என்று வீட்டுஉரிமையாளர்கள் மறுத்துவிடுவதும்,தட்டிக்கழிப்பதும்தான் என்றும் தெரிவிக்கின்றனர்.
மேலும்,அவ்வப்போது ரேஷன் கார்டுகள் குறித்து அரசு அறிவிக்கும் திட்டங்கள்,மாற்றங்கள் குறித்து நாளிதழ்களில் வெளியிடப்படும் அறிவிப்புகள் இவர்களுக்கு படிக்கத் தெரியாத காரணத்தால்,தங்கள் கவனத்திற்கு வருவதில்லை என்றும்,அதனை பின்னர் செவிவழித் தகவல்களாக அறிந்துகொண்டு,ரேஷன் கார்டுகளை புதிதாக பெறவோ,அல்லது பழையதைப் பதிவு செய்யவோ அரசு அதிகாரிகளை அணுகினால்,அங்கு தாங்கள் படும் துன்பங்களும்,அலைக்கழிப்புகளும் பரிதாபகரமானது என்றும், இதேபோல் ஊனமுற்றோருக்கான உதவித் தொகை பெறுவதிலும் இதேபோன்ற சிரமங்கள் நீடிக்கிறது என்றும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
கேரளாவில் மாநிலம் முழுவதிலும் பயணம் செய்ய இலவச பஸ்பாஸ் கொடுக்கப்பட்டுள்ளது.அதேபோல் புதுச்சேரி மாநிலத்தில் இவர்களுக்கான மாதஉதவித்தொகை இரண்டாயிரம் ரூபாயாக உள்ளது.ஆனால் தமிழகத்தில் ரூ.நானூறு மட்டுமே வழங்கப்படுகிறது.அந்த மாநிலஅரசு வழங்குவதுபோன்ற சலுகைகளை தமிழகஅரசும் வழங்கவேண்டும் என்பது இவர்களின் கோரிக்கையாக உள்ளது. வேலை வாய்ப்புகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் வழங்க அரசு உத்தரவிருந்தாலும்,அது நடைமுறையில் பின்பற்றப்படுவதில்லை என்பதும்,இதனால் பார்வையற்றிருந்தாலும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் படும் துன்பமும் தொடர்கிறது.
புhர்வையில்லை என்ற ஒரு குறையிருந்தாலும் சராசரி மனிதர்களைப் போல வாழவேண்டும் என்ற இவர்களின் நம்பிக்கையை மதிக்கும் வகையில்,விழியிழந்த இவர்களைக் குறித்து,அரசு, அரசுஅதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழப்புணர்வுதேவை என்பதே இவர்களின் வேண்டுகோளாக உள்ளது.
No comments:
Post a Comment