செம்மொழி மாநாட்டை முன்னிட்டு
ரூ.1 கோடி செலவில் திருவள்ளுவர் சிலை.!
பொள்ளாச்சி.ஜுன்.20 கோவைமாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள கேரள எல்லையான கோபாலபுரத்தில்,நெடுஞ்சாலைத்துறை சார்பில்,சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில்,திருவள்ளுவர் சிலை மற்றும் அறிவுச்சுடர் சிலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மாநாட்டிற்கு முன்பாக திறக்கப்படவுள்ள இச்சிலையமைப்பு பணிகளை,நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சுவாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழக எல்லைகளில் உள்ள நெடுஞ்சாலைகளில்,பிறமாநில மக்களை வரவேற்கும் விதமாக,முகப்புத்தூண்கள் அமைப்பதை,தமிழக நெடுஞ் சாலைத்துறை வழக்கமாகக் கொண்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக,கோவைமாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள,கேரள எல்லையான கோபாலபுரத்தில் முகப்புத்தூண்களை அமைக்க முடிவு செய்தது.இந்நிலையில் கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாட்டின் நினைவாக இப்பகுதியில் உள்ள மாநில நெடுஞ்சாலையி;ன் நடுவே திருவள்ளுவர் சிலையும்,சாலையின் இருபுறமும் அறிவுச்சுடர் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு,அதற்கான பணிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது.
கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையைப் போலவே,அமைக்கப்பட்டு வரும் இத்திருவள்ளுவர் சிலை அமைப்புப் பணிகள் கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாடு துவக்கத்திற்கு முன்பாகவே திறப்புவிழா செய்யப்படும் வகையில்,பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வரும்,இச்சிலையமைப்புப் பணிக்காக,சாலைகள் அகலப்படுத்தப்பட்டு,நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும்,நடைபாதையோரப் பூங்காக்கள்,செயற்கை நீரூற்றுக்கள்,அலங்கார வண்ணவிளக்குகளும் அமைக்கப்பட்டுவருகின்றன.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இப்பணிகளை துரிதமாக முடிக்கும் வகையில் செயல்பட்டுவருகின்றனர்.
இதனையடுத்து,தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சுவாமிநாதன்,இப்பணிகளைப் பார்வையிட்டு,ஆய்வு செய்ததோடு,சில திருத்தங்களையும் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். மேலும் வரும் 22.ஆம் தேதி,இச்சிலையமைப்புப் பணிகள் முற்றிலுமாக முடிக்கப்பட்டு,திறப்புவிழா செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், கேரள மாநிலத்து மக்களை வரவேற்கும் விதமாகவும்,திருவள்ளுவரின் புகழை மேலும் எடுத்துக்கூறும் வகையிலும் இச்சிலை அமையும் எனறும் அவர் தெரிவித்தார்.
நம்ம ஊர் பரவாயில்லை!
12 years ago
No comments:
Post a Comment