கோவைமாவட்டம் வால்பாறையில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டங்களுக்குட்பட்ட, பழுதடைந்த சாலைகள்,பொள்ளாச்சி கோட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். பழுதடைந்த சாலைகளில் அரசுப்பேருந்துகள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து,நடந்து செல்லும் பாதசாரிகள் சிறுத்தைப்புலிகள்,காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் தாக்குதலுக்குள்ளாவது வாடிக்கையாகி வருவதால், இந்த சாலைகள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவைமாவட்டம் வால்பாறை பகுதியிலுள்ள தனியார் தேயிலைத் தோட்டங்களின் வழியாகச் செல்லும் சாலைகளில்,கடந்த காலங்களில் அரசுப்பேருந்துகள் சென்றுவந்து கொண்டு இருந்தன.நாளடைவில் அந்த சாலைகள் பராமரிப்பின்றி பழுதடைந்ததால் பெரும்பாலான பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன.
இதனையடுத்து அவ்வழியாக தங்கள் குடியிருப்புகளுக்கு,நடந்துசெல்லும் பெண்கள்,குழந்தைகள் உள்ளிட்ட பாதசாரிகள், சிறுத்தைப்புலிகள், காட்டுயானைகள்,கரடிகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் தாக்குதலுக்குள்ளாவதும்,சிலர் உயிரிழப்பதும் தொடர்கதையானது.
கடந்தசில தினங்களுக்கு முன் மாவட்டஆட்சியர் உமாநாத் தலைமையில் பொள்ளாச்சியில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கோவைதங்கம் மற்றும் வனத்துறை அதிகாரிகள், இப்பிரச்சினைகள் குறித்து மாவட்டஆட்சியரின் கவனத்திற்கு எடுத்துரைத்தனர்.
இதனையடுத்து சாலைகள் சீரமைக்கப்படுவதால் பெருமளவில் வன விலங்குகளால் ஏற்படும் தாக்குதல்களைத் தவிர்க்கமுடியும் என்றும். சீரமைக்கப்பட்ட சாலைகளில் அரசுப்பேருந்துகள் மற்றும் ஷேர்ஆட்டோக்கள் விடுவதன் மூலம் பாதசாரிகளின் நடமாட்டத்தைக் குறைக்கமுடியும் என்றும் ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து பழுதடைந்த சாலைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு அது குறித்த அறிக்கைகளைத் தருமாறு மாவட்ட ஆட்சியர் உமாநாத் உத்தரவிட்டடைத் தொடர்ந்து,பொள்ளாச்சி கோட்டாட்சியர் அழகிரிசாமி தலைமையில், அரசுப்போக்குவரத்துக்கழகம், நெடுஞ்சாலைத்துறை, மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் வால்பாறையை அடுத்துள்ள ஊசிமலை, சின்னக்கல்லார், சோலையார்,வில்லோனி உட்பட பலபகுதிகளில்உள்ள சுமார் 73.கி.மீ.நீளமுள்ள சாலைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டனர்.
இந்த ஆய்வுகளுக்குப் பிறகு பெறப்படும் அறிக்கையின் அடிப்படையில்,தனியார் தேயிலைத் தோட்டத்திற்குட்பட்ட பழுதடைந்த சாலைகள்,வால்பாறை நகராட்சி அல்லது நெடுஞ்சாலைத்துறைவசம் ஒப்படைக்கப்பட்டு புதிய சாலைகள் போடவும்,பழுதடைந்த சாலைகள் சீரமைக்கவும்,நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,இச்சாலைகளில் முதற்கட்டமாக அரசுப்பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment