சூளையில் வேகும் நாளைய மனிதர்களுக்கு அரசு உதவி கிடைக்குமா.?
சுண்ணாம்புக்கல் தயாரிக்கப் பயன்படும் ஓடைக்கற்களை கனிமவளப்பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என்றும்,சுண்ணாம்புக்கல் தயாரிக்கும் பலநூறு குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலுள்ள சுண்ணாம்புக்கல் சூளைத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஊரகத்தொழில்துறை அமைச்சரிடம் மனு ஒன்றையும் அளித்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் இருந்த நூற்றுக்கும் அதிகமான சுண்ணாம்புக்கல் சூளைகள்,தற்போது 50.க்கும் குறைவான எண்ணிக்கையில் இயங்கிவருகின்றன.இதில் 300.க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பரம்பரையாக ஈடுபட்டுவருகின்றன. சுண்ணாம்புக்கல் காளவாயில் நெருப்போடு நெருங்கிய வாழ்க்கை, புகையோடுகூடிய சுவாசம் என தங்கள் வாழ்நாளை,மிகக்குறைந்த கூலியுடன் கடத்திக் கொண்டிருக்கும் இவர்களுக்கு கடந்தசில நாட்களாக,சுண்ணாம்புக்கல் தயாரிப்பதற்கான மூலப்பொருளாக விளங்கும் ஓடைக்கற்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காரணம்,ஓடைக்கற்கள் என்பது,கனிமவளப் பொருட்கள் பட்டியலில் உள்ளது எனக்கூறி,இக்கற்களை ஏற்றிவரும் லாரிகளை வருவாய்த்துறை மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் பிடித்து ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதித்து வருகின்றனர்.இதனால் ஓடைக்கற்கள் காளவாய்களுக்கு விநியோகம் செய்வது தடைபட்டுள்ளது. இது குறித்து லாரிஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் கூறும்போது, தரிசுநிலங்கள்,விவசாய நிலங்களாக மாற்றப்படும்போது,விவசாயத்திற்கு இடையூறாகவுள்ள ஓடைக்கற்கள் அப்புறப்படுத்தப்படுகின்றன. இதனை சேகரித்து தரும்வேலையை மட்டுமே தாங்கள் செய்வதாகவும் அதற்கு ரூ.25 ஆயிரம் அபராதம் செலுத்தும் நிலையில் தாங்கள் இல்லை என்று தெரிவிக்கின்றனர். சுகாதரப்பணிகளுக்காகவும்,வீடுகளில் வெள்ளையடிப்பதற்கும் பயன்படும் சுண்ணாம்புக்கல் தயாரிப்பு பணிகள்,ஓடைக்கற்கள் வராததால் தடைபடுகிறது என்றும் இதனால் தொழிலாளர்களுக்குரிய கூலியை வழங்கமுடிவதில்லை என்றும் காளவாய் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். விவசாயநிலங்களை மேம்படுத்தும் பணிகளில் ஒன்றாகவே ஓடைக்கற்களை அப்புறப்புடுத்துவதும்,அதனை வைத்து தயாரிக்கும் சுண்ணாம்பு பொடியை கால்சியம் சத்துகுறைவான பயிர்களுக்கும்,நிலங்களுக்கும் பயன்படுத்துவதாகவும் கூறும் விவசாயிகள், அரசுஅதிகாரிகள் விதிக்கும் தடைகளால் விவசாயமும் பாதிக்கும் என்று தெரிவிக்கின்றனர். கடந்தசில தினங்களாக ஓடைக்கற்களின் வரத்து நின்றுபோனதால்,தங்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு,இதேநிலை நீடித்தால் உணவுக்குகூட தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும் என்றும்,இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கூறுகின்றனர். எனவே கனிமவளப்பொருட்களின் பட்டியலிலிருந்து ஓடைக்கற்களுக்கு விலக்கு அளிக்க தமிழகஅரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும்,அதனால் மட்டுமே இப்பகுதியில் சுண்ணாம்புக்கல் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள 300.க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்றும் சுண்ணாம்புக்கல்சூளைத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழக ஊரகத்தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியிடம் மனு ஒன்றும் அளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment